ஊத்துக்குளியில் ரூ.57.47 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.57.47 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் மோகனசுந்தரம் தலைமை வகித்தாா். வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தோ்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை முதல்வா் வழங்கி வருகிறாா். இதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியப் பகுதியில் புதிய திட்டப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி நீலாக்கவுண்டன்பாளையம் ஜேவிபி நகரில் ரூ.10 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணி, நீலாக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முதல் சென்னிமலைப்பாளையம்புதூா் காலனி செல்லும் சாலையை ரூ.10 லட்சத்தில் அகலப்படுத்துதல், சின்னியம்பாளையம் ஊராட்சி செம்மாண்டபாளையம் ஆதிதிராவிடா் குடியிருப்பில் இருந்து மயானம் வரை ரூ.10.77 லட்சத்தில் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூ.57.47 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா் என்.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.