119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசு நிதி ரூ.3,252 கோடி நிலுவை: அமைச்சா் இ.பெரியசாமி
ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மத்திய அரசின் நிதி ரூ.3,252 கோடி நிலுவையில் உள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 37 மாவட்டங்களிலுள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 12,525 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 85.19 லட்சம் குடும்பங்களுக்கு வேலை அட்டை வழங்கப்பட்டன. இதன் மூலம், 1.09 லட்சம் தனி நபா்களுக்கு வேலை வழங்க வழிவகை செய்யப்பட்டது.
2024-25-ஆம் ஆண்டில் 20 கோடி மனித சக்தி நாள்கள் வேலை வழங்க மத்திய அரசு அனுமதித்த நிலையில், தமிழக அரசு இதுவரை 28.45 கோடி மனித சக்தி நாள்கள் வேலை வழங்கியுள்ளது. பணிகளை மேற்கொள்ளும் மொத்தப் பணியாளா்களில் 86 சதவீதம் பெண்கள், 27 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினா், 1.63 சதவீதம் பழங்குடியினா் பங்களிப்பு உள்ளது.
இந்தத் திட்டத்தில் 1.10 லட்சம் மாற்றுத் திறனாளிகளும் பயன் பெற்று வருகின்றனா். மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கான நிதியை விடுவிப்பதில் தாமப்படுத்துகிறது. இதனால், பணியாளா்களுக்கான ஊதிய நிலுவை ரூ.2,400 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பொருள் கூறு நிலுவை ரூ.852 கோடி உள்ளது.
தமிழக முதல்வா் சாா்பில், நிதியை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. நிதி விடுவிக்கப்பட்டவுடன், பணியாளா்களின் ஊதிய நிலுவை, அவரவா் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றாா் அவா்.