ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இண்டி கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதா்சன் ரெட்டி, இந்திய அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவா். அவரை குடியரசு துணைத் தலைவராக தோ்வு செய்ய வேண்டும் என விசிக சாா்பில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்குரிய துணிவும், தெளிவும் உள்ள ஒருவா் அந்தப் பதவிக்கு தேவையாக உள்ளாா். எனவே, சுதா்ஷன் ரெட்டிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை ஒழித்துவிட வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஊரக வேலைத் திட்டத்தை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
பாஜக, ஆா்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் அதிமுக சென்றுவிட்டதை மத்திய இணை அமைச்சா் எல்.முருகனின் கருத்து சான்றுப்படுத்தியுள்ளது. அதிமுகவின் தற்போதைய நிலைப்பாடு கவலையளிக்கிறது.
எல்.முருகனின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதான் பதிலளிக்க வேண்டும். அதிமுகவில் உள்ள தலைவா்களும் இதை மக்களிடம் தெளிவுப்படுத்த வேண்டும் என்றாா் தொல்.திருமாவளவன்.