எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?
’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான்.
அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் சொல்லிவிட்டு, தற்போது பலரையும் படுத்திக்கொண்டிருக்கும் காய்ச்சலின் அறிகுறிகள், தீர்வுகள் குறித்து பேசுகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவ மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா.

’’பருவ காலம் மாறுகிற இந்த நேரத்துல சுவாசப்பாதையில தொற்று ஏற்படுத்துற சில வைரஸ்கள் பரவ ஆரம்பிக்கும். இதனால சளி, இருமல், தும்மல், மூக்கொழுதல், மூக்கடைப்பு என்று பிரச்னைகள் வரிசைக்கட்டி வர ஆரம்பிக்கும்.
சுவாசப்பாதை தொற்றுங்கிறதால பள்ளிக்கூடங்கள்ல, வேலைபார்க்கிற இடங்கள்ல, கூட்டமா இருக்கிற இடங்கள்ல ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்கு சுலபமா பரவவும் ஆரம்பிச்சுடும்.
இதனால ஒரு அவுட் பிரேக் சூழல் வந்து, எல்லாருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வந்த பிறகு, அப்படியே அடங்கிடும்.
இந்த நேரத்துல, இன்ஃப்ளுவன்சா ஏ, ஹெச்1 என்1, ஹெச்3 என்2 வைரஸ்களும் அட்டாக் பண்ண ஆரம்பிக்கும். கூடவே கொசுவால வர்ற சிக்கன் குனியா, டெங்கு மாதிரியான காய்ச்சல்களும் வர ஆரம்பிக்கும்.
சுவாசப்பாதை தொற்று வந்திருந்தால், காய்ச்சல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், இருமல், தொண்டை வலி, கழுத்துல ரெண்டு பக்கமும் நெறி கட்டுறது ஆகியவை இருக்கும்.
காய்ச்சல் வந்த 48 மணி நேரம் நல்லா ஓய்வு எடுக்கணும். நிறைய தண்ணி குடிக்கணும். கஞ்சி, பழச்சாறு மாதிரி நீர் ஆகாரங்கள் நிறைய எடுத்துக்கணும். காய்ச்சல் அடிக்கிறப்போ சிறுநீர் சரியா போகணும். இந்த விஷயத்துல எல்லாருமே கவனமா இருக்கணும்.
எச்சரிக்கைகள் என்று பார்த்தீங்கன்னா மூணு நாளைக்கு மேல விடாம காய்ச்சல் அடிச்சாலும், மூச்சுத்திணறல் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடனும். ஏன்னா, சுவாசத்தொற்று வர்றதுனால நுரையீரல்ல நிமோனியா தொற்று ஏற்படலாம்.
குழந்தைகளும் சரி, வளர்ந்தவங்களும் சரி, எதுவுமே சாப்பிட முடியாம சோர்வா இருப்பாங்க. சிலருக்கு சிறுநீர் சரியா போகாது. இந்த அறிகுறிகள் இருந்தாலும் உடனே ஹாஸ்பிடல் போயிடணும்.
அங்கு பரிசோதனைகள் மூலம் வந்திருக்கிறது நிம்மோனியான்னு தெரிஞ்சுதுன்னா அதற்கான சிகிச்சைகளை கொடுக்க ஆரம்பிப்பாங்க.
நிம்மோனியா விஷயத்துல ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை ரொம்ப கவனமா பாத்துக்கணும்.
முதியவர்கள்ல சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய், கல்லீரல்ல பிரச்னை இருக்கிறவங்களும் கவனமா இருக்கணும்.

காய்ச்சல் சரியானதும் புரதச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்க ஆரம்பிக்கணும். காய்கறி சூப், அசைவ சூப், பழங்கள் சாப்பிட்டு காய்ச்சலால பலவீனமான உடம்பை தேத்தணும். மத்தபடி இந்த காய்ச்சல் சம்பந்தமா யாரும் பயப்பட தேவையில்லை. இது சாதாரணமா வருஷாவருஷம் வந்து போற காய்ச்சல்தான்’’ என்கிறார் டாக்டர் ஃப்ரூக் அப்துல்லா.