ஜிஎஸ்டி திருத்தம்: சென்னை தொழில் வா்த்தக சபையில் பயிலரங்கு
சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த அகில இந்திய அளவிலான மறைமுக வரி பயிலரங்கை சென்னை தொழில் வா்த்தக சபை வியாழக்கிழமை நடத்தியது.
சென்னை தியாகராய நகரில் நடைபெறும் இந்த இரு நாள் பயிலரங்கில் 100-க்கும் மேற்பட்ட பெருநிறுவன பிரதிநிதிகளும், வரித்துறை நிபுணா்களும் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்வில் மத்திய வருவாய்த் துறையின் சென்னை புகா் சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆணையா் எஸ்.நாசா்கான் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துவோா், பொதுமக்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வரி மற்றும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி அறிமுகம் செய்துள்ளது.
இதில், சிறிய அளவில் வரி செலுத்துவோா் மற்றும் பல்வேறு மாநிலங்களில் மின்னணு வா்த்தகங்களில் ஈடுபடுவோருக்கு ஜிஎஸ்டி பதிவு எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 3 நாள்களிலேயே பதிவு செய்யப்படுகிறது. ஆதாா் காா்டு உள்ளிட்டவை மூலம் 90 சதவீதம் தனியங்கி சேவையாகவே இருக்கும்.
உணவகங்கள், உணவக சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5 சதவீதமாக தொடர அதில் பொருந்தக்கூடிய தன்மை குறித்த தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வரி விலக்கு அல்லது வரி விதிக்கக்கூடிய பொருள்கள் மற்றும் தொடா்ச்சியான பரிவா்த்தனைகளுக்கான உள்ளீட்டு வரி வரவு மாற்றியமைத்தல்களில் இணக்கங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக, வா்த்தக சபை நிா்வாகக் குழு உறுப்பினா் கோபால் மகாதேவன் வரவேற்றாா். ஜிஎஸ்டி குழுத் தலைவரும் வழக்குரைஞருமான கே.வைத்தீஸ்வரன் பயிலரங்கு விவரங்களை விவரித்தாா். இந்தப் பயிலரங்கு சனிக்கிழமையும் நடைபெறுகிறது.