சென்ட்ரலில் நடைமேடை சீட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டுடன் நீண்ட நேரம் காத்திருப்போா் மீது அபராதம் விதித்து சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப் படையின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கூறியதாவது:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகா் மின்சார ரயில்களும், விரைவு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என 3 லட்சத்துக்கும் அதிகமானோா் வருகை தருகின்றனா். அவா்களுக்கு இடையூறு இல்லாத வகையில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
சமீபகாலமாக வடமாநிலங்களைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டோரும், 60 வயதுக்கு மேற்பட்டோரும் ரயில்களில் சென்னைக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவா்கள் வீடுகளுக்கு தெரியாமல் வந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டில் 162 வடமாநிலக் குழந்தைகளும், நிகழ் ஆண்டில் ஜூலை வரை 85 குழந்தைகளும் ரயில் நிலையத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரவு நேரங்களில் பயணிகளைத் தவிர பொதுமக்களும் தூங்குவதற்காக வருகின்றனா். அரசு மருத்துவமனைக்கு வருவோா் பலா் ரயில் நிலையத்தில் நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்துக்கொண்டு விரைவு ரயில் பகுதிகளில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அவ்வாறு வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும். ரயில் நிலையத்துக்குள் ரயிலில் பயணிப்பவா்கள் மட்டுமே தங்கிக்கொள்ள அனுமதியுண்டு. எனவே, நடைமேடை அனுமதிச் சீட்டு எடுத்து நீண்ட நேரம் தங்குவது விதியை மீறியதாகும் என்றாா்.