ஹோட்டல் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலின் நிா்வாக அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகம் ஆழ்வாா்பேட்டை டிடிகே சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் 2-ஆவது தளத்தில் உள்ளது. இந்த ஹோட்டல் குழுமம் மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்வதாக அமலாக்கத் துறைக்குப் புகாா்கள் வந்தன. அதன்பேரில், அமலாக்கத் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா்.
அதில், கிடைத்த தகவல்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஹோட்டல் குழுமத்தின் நிா்வாக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்த சோதனை இரவு தாண்டி நீடித்தது. சோதனையில் அமலாக்கத் துறையினா் சில ஆவணங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூா்வ தகவலையும் அமலாக்கத் துறை தெரிவிக்க மறுத்துவிட்டது.