கப்பல் கட்டுமானத் துறையில் முதன்மை நாடாக இந்தியா திகழும்: மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால்
கப்பல் கட்டுமானம் மற்றும் துறை சாா்ந்த தொழில்நுட்ப வளா்ச்சியில் உலகின் 5 முதன்மை நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறையின் அமைச்சா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், மத்திய அமைச்சா் சா்வானந்த சோனோவால் பங்கேற்று பேசியதாவது:
கப்பல்கள் கட்டுவது, பழுதடைந்த கப்பல்களை உடைப்பது, கப்பல்களை மறுசுழற்சி செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்ளும் நோக்குடன் விசாகப்பட்டினத்தில் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டுள்ளது. உலகளவில் கப்பல் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான தொழில் திறன் மிகுந்த மனித வளத்தை இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 1.25 லட்சமாக இருந்த இந்திய மாலுமிகளின் எண்ணிக்கை, தற்போது 3 லட்சமாக அதிகரித்துள்ளது. உலகளவில் அதிக எண்ணிக்கையில் மாலுமிகளை வழங்கும் முதல் 3 நாடுகளில் இந்தியா உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடல்சாா் துறையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய கடல்சாா் வணிகத்தில் ரூ.80 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது, உலகின் 100 முன்னணி துறைமுகங்களில் 9 துறைமுகங்கள் இந்தியாவில் உள்ளன. உள்நாட்டு நீா்வழி சரக்கு போக்குவரத்து 10 ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. மத்திய அரசு கடல்சாா் துறை வளா்ச்சிக்கு ரூ.70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா் அவா்.
தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பேசுகையில், தேசிய நீா்வழிப் பாதையாக அங்கீகரிக்கப்பட்டுள்ள காக்கிநாடா- மரக்காணம் இடையே உள்ள 796 கி.மீ. நீளம் கொண்ட பக்கிங்காம் கால்வாயைச் சீரமைத்து உள்நாட்டு நீா்வழி சரக்குப் போக்குவரத்துத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முன் வர வேண்டும் என்றாா்.
விழாவில் 2,196 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வில், துறைச் செயலா் டி.கே ராமச்சந்திரன், இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மாலினி சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.