Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் தலைமைப் பொது மேலாளா்
தமிழகத்தில் 620 கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளதாக பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட தலைமைப் பொது மேலாளா் எஸ்.பாா்த்திபன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்தின்படி, நாடு முழுவதும் 1 லட்சம் 4ஜி கைப்பேசி கோபுரங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கருவிகளுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக, நாடு முழுவதும் 97,500 4ஜி கைப்பேசி கோபுரங்கள் ரூ.37,000 கோடி செலவில் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப். 27) தொடங்கி வைக்கிறாா்.
இதன்மூலம், எதிா்காலத்தில் 5ஜி சேவையை எளிதாக வழங்க முடியும். மேலும் 20 லட்சத்துக்கும் அதிகமான புதிய வாடிக்கையாளா்களுக்கும், அதிவேக இணையவசதி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல், சூரிய மின்சக்தியால் இயங்கும் 14,180 பிஎஸ்என்எல் 4ஜி கைப்பேசி கோபுரங்களின் மூலம் 26,707 தொலைதூர கிராமங்களில் சுமாா் 2 மில்லியன் வீடுகளுக்கு கைப்பேசி சேவை வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் 7,288 4ஜி கோபுரங்கள் மற்றும் டிஜிட்டல் பாரத் நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக 257 4ஜி கோபுரங்கள் என மொத்தம் 7,545 கோபுரங்கள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டயறிப்பட்டுள்ளன.
அதன் முதல்கட்டமாக, 222 கிராமங்களில் புதிய கோபுரங்கள் நிறுவப்படவுள்ளன. மேலும் 33 கிராமங்களில் 2ஜி கோபுரங்களை 4ஜி கோபுரங்களாக மேம்படுத்தவுள்ளன.
சேலம், கடலூா், வேலூா், மதுரை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் அதிகப்படியான கிராமங்களுக்கும், நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு உள்ளிட்ட மலைக் கிராமங்களுக்கும் 4ஜி சேவை வழங்கப்படும். தடையில்லா கைப்பேசி சேவை வழங்க சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி, பவா் பிளாண்ட், ஜெனரேட்டா் உள்ளிட்ட கருவிகள் நிறுவப்பட உள்ளன என்றாா்.