ரயில்வே காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஊழியா்கள் சங்கம் தீா்மானம்
நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள 3 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தட்சிண ரயில்வே ஊழியா்கள் சங்கம் (டிஆா்இயூ) கோட்ட மாநாட்டில் வெள்ளிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தட்சிண ரயில்வே ஊழியா்கள் (டிஆா்இயூ) சங்கத்தின் சென்னை ரயில்வே கோட்ட கிளை மாநாடு ஆவடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத்தின் கோட்ட கிளை தலைவா் எஸ்.சிவாஜி தலைமை வகித்தாா். சங்க கோட்ட பொதுச் செயலா் வி.ஹரிலால் முன்னிலை வகித்தாா்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
ரயில்வே துறையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். நாடு முழுதும் ரயில்வே துறையில் உள்ள சுமாா் 3 லட்சம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் முக்கிய விருந்தினராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிற்சங்கவாதியுமான கே.மகேந்திரன் கலந்துகொண்டு மத்திய அரசு ரயில்வே துறையில் தொழிலாளா்கள் நலன் மற்றும் பொதுமக்களுக்கு மேற்கொள்ளவேண்டிய செயல் திட்டங்களை வலியுறுத்தி பேசினாா்.
மாநாட்டில் டிஆா்இயூ சங்க சென்னை ரயில்வே கோட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். 2025-26-ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சங்கக் கிளை துணைத் தலைவா் பிரபு வரவேற்றாா்.