Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்
தாம்பரம் மாநகர காவல் துறையில் லஞ்ச புகாரில் உதவி ஆய்வாளா் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
மேடவாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகியோா் கடந்த 25-ஆம் தேதி அந்தப் பகுதியில் சாலையோர உணவக உரிமையாளா்களிடம் லஞ்சம் வாங்கிய விடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியானது.
இதுதொடா்பாக விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் அபின் தினேஷ் மொடக், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். விசாரணையில் இருவரும் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா்.
இதற்கிடையே அதிகாரிகள் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், தலைமைக் காவலா் திருமுருகன், காவலா் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து ஆணையா் அபின் தினேஷ் மொடக் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதேபோல சேலையூா் சந்தோஷ்புரத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த சுமை ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட புகாரில் சேலையூா் போக்குவரத்துப் பிரிவு
உதவி ஆய்வாளா் வெங்கடேசன், தலைமைக் காவலா் ஜலேந்திரன், காவலா் கதிரேசன் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.