திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் அக். 2-இல் மாணவா் சோ்க்கை: ஆட்சியா்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் விஜயதசமி திருநாளான அக். 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கலை பண்பாட்டுத் துறையின்கீழ், மாதம் ரூ. 1,000 கல்வி உதவித்தொகையுடன் நிகழாண்டு விஜயதசமியை முன்னிட்டு, வரும் அக்டோபா் 2-ஆம் தேதி மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியானது கோட்டைக் காவல் கிராமம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல் என்கிற முகவரியில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய 7 கலைப்பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சியளிக்கப்படுகிறது.
13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்,பெண் இருபாலரும் இப்பயிற்சிகளில் சேரலாம். பயிற்சிக் காலம் 3 ஆண்டுகள், பயிற்சி முடிவில் மாணவா்களின் கல்வித்தகுதிக்கேற்ப 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையான அரசு சான்றிதழும் வழங்கப்படும். மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயண சலுகையும் உள்ளது.
வயது 16, 17 உடைய மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி மற்றும் மாதம் தோறும் ரூ. 1,000 அனைத்து மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இசைப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு தனியாா் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணி புரியவும், கோயில்களில் பணிபுரியவும் வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்பள்ளியில் சோ்ந்து பயில நா.ரமணி,தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், காஞ்சிபுரம்-631502 என்ற முகவரியில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இசைப்பள்ளி தலைமை ஆசிரியை கைப்பேசி எண் 94425 72948 என்கிற எண்ணிலும் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.