எச்-1பி விசா கட்டண உயர்வு: ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் நிறுவனங்கள்!
அமெரிக்காவில் வெளிநாட்டவர் பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்-1பி விசாவுக்கான கட்டணத்தை ரூ. 88 லட்சமாக உயர்த்தி அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கை தகவலை அனுப்பி வருகின்றன.
அமெரிக்க குடியுரிமை பெறாத ஊழியர்களின் நுழைவு விசா மீதான கட்டுப்பாடு என்ற புதிய அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த அறிக்கையின்படி, எச்-1பி விசா திட்டம், தற்காலிகமாக, பெரு நிறுவனங்கள், ஊழியர்களை அமெரிக்காவிற்குள் மிகத் திறமையான அதிதிறன்பெற்ற செயல்பாடுகளைச் செய்வதற்காக கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் குறைந்த ஊதியம், குறைந்த திறமையான ஊழியர்களே போதும் என்ற இடங்களையும் இவர்கள் நிரப்பியதால், அமெரிக்க தொழிலாளர்கள் சுரண்டலுக்கு உள்ளாகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள முன்னணி தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது ஊழியர்களுக்கு எச்சரிக்கைத் தகவலை அனுப்பியிருக்கிறது.
அதன்படி, மைக்ரோசாஃப்ட், அமேஸான் உள்ளிட்ட நிறுவனங்கள், எச்-1பி மற்றும் எச்-4 விசா பெற்று தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறது.