அசுரனுடன் கைகோர்க்கும் லப்பர் பந்து இயக்குநர்! தனுஷின் புதிய பட அப்டேட்!
இந்தியாவுடன் சண்டை மூண்டால் சவூதி அரேபிய ராணுவம் நிச்சயம் களமிறங்கும்: பாக். அமைச்சர்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவூதி அரேபியா ராணுவம் நிச்சயம் களமிறங்கும் என்று பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பந்தம் கடந்த சில நாள்களுக்கு முன், கையொப்பமாகியுள்ளது. அதில் முக்கிய அம்சமாக, இரு நடுகளும் பாதுகாப்பு விவகாரத்தில் கூட்டாக இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் வெள்ளிக்கிழமை(செப். 19) ஊடகத்துக்கு அளித்துள்ளதொரு பேட்டியில் அவரிடம், “இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிட்டால் அப்போது சவூதி அரேபியா களமிறங்குமா?” என்று வினவப்பட்டது.
இதற்கு அவர், “ஆம் நிச்சயமாக... அதில் சந்தேகத்திற்கிடமில்லை” என்றார். மேலும் அவர் பேசும்போது, “பாகிஸ்தானோ அல்லது சவூதி அரேபியாவோ எந்தவொரு பக்கத்திலிருந்து தாக்கப்பட்டாலும், அந்த தாக்குதல் நடவடிக்கையானது, இவ்விரு நாடுகள் மீதான தாக்குதலாகவே கருதப்படும். அதற்கு நாங்கள் இணைந்து பதிலடி கொடுப்போம்” என்றார்.
இவ்விரு நாடுகளுக்கு இடையில் கையொப்பமாகியுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பிலிருந்து அதன் செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் குறிப்பிடும்போது: “இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கும் பிராந்திய மற்றும் உலக நிலைத்தன்மைக்கும் இந்த நெடுங்கால ஒப்பந்தத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதிலும் பரந்தளவில் அனைத்து பிரிவுகளிலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசு கவனமுடன் செய்லாற்றி வருகிறது” என்றார்.