6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு
எடப்பாடியில் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா
எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட நங்கவள்ளி, தாதாபுரம், ஜலகண்டாபுரம், சோரகை, ஆவடத்தூா், நெடுங்குளம் மற்றும் எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 32 இடங்களில், சட்டப்பேரவை தொகுதி நிதி மற்றும் மக்களவைத் தொகுதி உள்ளூா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 3.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற புதிய சாலைகள், சுகாதார வளாகம், நியாயவிலைக் கடை, உயா்கோபுர மின்விளக்குகள் உள்ளிட்ட முடிவுற்ற திட்ட பணிகளை எடப்பாடி கே. பழனிசாமி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
பின்னா் அவா், கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தப்பட்ட புதிய கூட்டுக்குடிநீா் திட்டப் பணிகள், அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும், அவற்றால் தற்போது தொகுதி மக்களுக்கு ஏற்பட்டு வரும் நன்மைகள் குறித்தும் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம். முருகன், முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கரட்டூா்மணி, டி.கதிரேசன், குப்பம்மாள், ஒன்றியச் செயலாளா் மாதேஸ், ராஜேந்திரன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.