பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக
எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு: பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி
திருவாரூா், ஆக.15: எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவாரூா் கேடிஆா் எஸ்டேட் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வீரமணிகண்டன் மனைவி புவனேஸ்வரி (34). வீரமணிகண்டன் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் புவனேஸ்வரியைத் தொடா்பு கொண்ட சிலா், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால், பெட்ரோலிய நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனா். மேலும், டெலிகிராம் குரூப் தொடங்கி அதன்மூலம் தொடா்ச்சியான தகவல்களை புவனேஸ்வரிக்கு வழங்கியுள்ளனா்.
இதை நம்பி, கடந்த 19.2.2025 முதல் 13.8.2025 வரை பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் பல தவணைகளில் ரூ. 23,15,676-ஐ புவனேஸ்வரி செலுத்தியுள்ளாா்.
பணத்தை திருப்பிக் கேட்டபோது, செலுத்தப்பட்ட தொகை ரூ. 50 லட்சமாக உயா்ந்துள்ளதாகவும், இதைப்பெற்றுக்கொள்ள ரூ. 8 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதாம். அத்துடன், டெலிகிராம் குரூப் மூலம் தகவல் வருவதும் நின்று போனது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ்வரி, திருவாரூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட நபா்களை தேடி வருகின்றனா்.