எத்தனை பேரை கொல்ல முடியும் என்பது வலிமை இல்லை: இஸ்ரேல் பிரதமருக்கு ஆஸி. பதிலடி!
ஆஸ்திரேலியா நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பலவீனமானவர் என்ற இஸ்ரேல் பிரதமரின் கருத்துக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவில்லை என்றால் விரைவில் பாலஸ்தீனம் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
இதற்கு, சமூக வலைதளத்தில் எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை வரலாற்றில், ஆஸ்திரேலிய யூதர்களுக்கு துரோகம் செய்த பலவீனமான அரசியல்வாதியாகவே நினைவுக்கூரப்படுவார் எனப் பதிவிட்டார்.
இந்தப் பதிவுக்கு, பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நெதன்யாகு வலிமையையும் மக்களைக் கொல்வதையும் ஒப்பிடுகிறார் என ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டோனி புர்கே விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து, ஆஸ்திரேலியாவின் தேசிய ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில்:
“வலிமை என்பது எத்தனை பேரை உங்களால் வெடிக்க வைக்க முடியும் அல்லது எத்தனை குழந்தைகளை உங்களால் பட்டிணியிட முடியும் என்பதன் மூலம் அளவிட முடியாது.
இஸ்ரேல் விரும்பாத ஒரு முடிவை, பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் எடுத்ததன் மூலம், அவரது வலிமை மிகவும் சிறப்பாகவே அளவிடப்படுகிறது. எங்களது நோக்கம் என்ன, நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை அவர் நேரடியாக, நெதன்யாகுவிடம் கூறுகிறார்” என அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போர் தாக்குதல்கள் மற்றும் நிவாரணப் பொருள்களின் முடக்கம் ஆகியவற்றினால் நீண்டகால நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா - இஸ்ரேல் இடையிலான உறவில் விரிசல் உண்டாகியுள்ளது.
மேலும், போர்நிறுத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால் பாலஸ்தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படும் என பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!