எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி
இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார்.
இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமானார்.
ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடுகிறார்.
தற்போது, இங்கிலாந்துடன் இந்தியா 3-ஆவது டெஸ்ட்டில் விளையாடி வருகிறது.
முதல்நாளில் நிதீஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்ட். அது குறித்து அவர் பேசியதாவது:
பாட் கம்மின்ஸுக்கு பாராட்டு
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்துக்குப் பிறகு எனது பந்துவீச்சிலும் நிலைத்தன்மையிலும் முன்னேற்றம் இருக்கிறது. நான் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்.
பாட் கம்மின்ஸ் ஐபிஎல்லில் எனது கேப்டன். அவர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாகச் செயல்பட்டார். நான் அவரிடம் அறிவுரை கேட்டேன்.
அதற்கு கம்மின்ஸ் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும், ஆஸ்திரேலியாவில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
கம்மின்ஸுடன் பேசியது எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.
தற்போதைய ஃபார்மை தொடர விரும்புகிறேன்
இந்தச் சுற்றுப் பயணத்தில் மோர்னே மோர்கல் என்னுடன் சில வாரங்கள் பணியாற்றினார். அவருடன் வேலை செய்வதில் ஆர்வமுடன் இருக்கிறேன்.
என்னால் இருபுறமும் ஸ்விங் செய்ய முடியும் என்பதால் அதில் நான் நிலைத்தன்மையுடன் இருக்க முயல்கிறேன்.
ஒன்றிரண்டு ஆண்டுகளாக பந்துவீச்சில் தீவிரமாக பயிற்சி எடுக்கிறேன். நம்மை நாமே நம்பினால் மட்டுமே நமது உழைப்பின் பலன் கிடைக்கும்.
காயத்துக்குப் பிறகு மீண்டும் பழைய மாதிரி பந்துவீசுவதில் சிரமம் இருக்கிறது. இருப்பினும் நன்றாக பந்துவீசுகிறேன். அதையே தொடர விரும்புகிறேன் என்றார்.