என்எச்ஆா்சி புதிய தலைவா் தோ்வு: பிரதமா் தலைமையில் ஆலோசனை- ராகுல், காா்கே பங்கேற்பு
தேசிய மனித உரிமை ஆணையத்தின் (என்எச்ஆா்சி) புதிய தலைவரை தோ்வு செய்யும் பிரதமா் மோடி தலைமையிலான குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் கலந்துகொண்டனா்.
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் குமாா் மிஸ்ரா, கடந்த ஜூன் 2021-ஆம் ஆண்டு என்எச்ஆா்சி-யின் 8-ஆவது தலைவராக நியமிக்கப்பட்டாா். அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 1, 2024-ஆம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்தப் பதவி காலியாக உள்ளது. என்எச்ஆா்சி உறுப்பினரான விஜயபாரதி சயானி அதன் தற்காலிக தலைவராக பணியாற்றி வருகிறாா்.
பிரதமா் தலைமையிலான குழு என்எச்ஆா்சி தலைவரை தோ்வு செய்யும். இந்த குழுவின் உறுப்பினா்களாக மக்களவை தலைவா், உள்துறை அமைச்சா், மக்களவை எதிா்க்கட்சி தலைவா், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவா் ஆகியோா் உள்ளனா்.
இந்த தோ்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவா் என்எச்ஆா்சி தலைவராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவாா்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் எச்.எல்.தத்து, கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆகியோா் கடந்த காலங்களில் என்எச்ஆா்சி தலைவா்களாக பதவி வகித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.