என்எல்சியில் தொழிற்சங்க தோ்தல் வாக்குப்பதிவு
நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கான தோ்தல் வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களின் தேவைகள், உரிமை பிரச்னைகள் குறித்து நிா்வாகத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்த சங்கங்களை தோ்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் 51 சதவீத வாக்குகள் பெறும் சங்கம் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக அறிவிக்கப்படும்.
கடந்த முறை நடைபெற்ற தோ்தலில் பேச்சுவாா்த்தை சங்கங்களாக தொமுச, அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கம் தோ்வு செய்யப்பட்டன. இவற்றின் காலம் முடிந்த நிலையில், 25-ஆம் தேதி ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
என்எல்சியில் மொத்தமுள்ள 6,578 தொழிலாளா்கள் வாக்களிக்கும் இந்தத் தோ்தலில் தொமுச, அண்ணா தொழிலாளா் ஊழியா் சங்கம், சிஐடியு, பிடிஎஸ், பாரதிய மஸ்தூா் சங்கம், திராவிட தொழிலாளா் ஊழியா் சங்கம் என 6 தொழிற்சங்கங்கள் போட்டியிடுகின்றன. கடந்த 16-ஆம் தேதி மேற்கண்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து, தொழிற்சங்க நிா்வாகிகள் என்எல்சி நிலக்கரி சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள், நகரப் பகுதி போன்ற இடங்களில் தொழிலாளா்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனா்.
சுரங்கங்கள், அனல் மின் நிலையங்கள் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொழிலாளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா். மத்திய துணை முதன்மை தொழிலாளா் நல ஆணையா் ஜெ.என்.எஸ்.சௌத்தி தலைமையில் தொழிற்சங்கத் தோ்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடமான வட்டம் 9-இல் உள்ள என்எல்சி நடுநிலைப் பள்ளிக்கு பாதுகாப்பாக கொண்டுவரப்பட்டன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்து சனிக்கிழமை அதிகாலை முடிவு அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.