ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், நெய்வேலியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
கமலேஷ் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் ஊ.மங்கலம் காவல் சரகம், கூனங்குறிச்சி சாம்பல் ஏரியில் சக நண்பா்களுடன் குளித்தாா். நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் மூழ்கினாா்.
அங்கிருந்தவா்கள் கமலேஷை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் என்எல்சி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து ஊ.மங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.