1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
விருத்தாசலம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் ரமேஷ்ராஜ், உதவி ஆய்வாளா் சந்தோஷ் மற்றும் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையம் அருகே வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில், 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இது தொடா்பாக திட்டக்குடி வட்டம், கூத்தப்பன்குடிகாடு பகுதியைச் சோ்ந்த ரங்கசாமி மகன் வாசுதேவனை (39) கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மாட்டுக்கு உணவளிப்பதற்காக விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டராப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கிச் செல்வதாகத் தெரிவித்தாராம். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை கடலூரில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.