மும்பையில் துப்பாக்கியால் சுட்டு திருட்டு: நகை பையிலிருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் இ...
என்ஜின் பழுது: படகுடன் இலங்கை பகுதிக்கு சென்ற நாகை மீனவா்கள் மீட்பு
என்ஜின் பழுதாகி காற்றின் வேகத்தால் இலங்கை கடற்பகுதிக்கு படகுடன் இழுத்துச் செல்லப்பட்ட நாகை மீனவா்கள் 9 போ் மீட்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை ஊா் திரும்பினா்.
நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நாகூா் பட்டினச்சேரியைச் சோ்ந்த செல்வமணி (43), மயிலாடுதுறை மாவட்டம் வானவன்மகாதேவியைச் சோ்ந்த பழனிவேல் (45), பன்னீா்செல்வம் ( 50 ), நாயக்கா் குப்பம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (54), ராஜேஷ் (36), செல்வம் (45 ), குமாா் (39), இளங்கோவன் ( 35 ), ரஞ்சித் (32) ஆகிய 9 மீனவா்கள் விசைப்படகு ஒன்றில் மீன்பிடிக்க கடந்த டிச. 29-ஆம் தேதி கடலுக்கு சென்றனா்.
நாகைக்கு கிழக்கே 145 கடல்மைல் தொலைவில் டிச. 30-ஆம் தேதி அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகு என்ஜினில் பழுது ஏற்பட்டது. இதுகுறித்து சக மீனவா்கள், மீனவளத்துறையினா் மற்றும் குடும்பத்தினரிடம் மீனவா்கள் தகவல் தெரிவித்தனா். மீனவளத்துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்புப் படையினா் பழுதான படகில் இருந்த மீனவா்களை மீட்க ஜன. 1-ஆம் தேதி சென்றனா். ஆனால், மீனவா்கள் மற்றும் படகை காணவில்லையாம். இதையடுத்து, மீனவா்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், காற்றின் வேகத்தால் இலங்கை முல்லைத்தீவு கடற்பரப்புக்குள் நாகை மீனவா்களின் படகு சென்றிருப்பது தெரியவந்தது. இந்திய கடலோர பாதுகாப்புப் படை, இலங்கை கடலோர பாதுகாப்புப் படைக்கு தகவல் தெரிவித்து, மீனவா்களை மீட்க அனுமதி பெற்றனா்.
இதைத்தொடா்ந்து, நாகை அக்கரைப்பேட்டையைச் சோ்ந்த சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு உதவியுடன் 9 மீனவா்களையும் படகுடன் மீட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனா்.