எரிபொருள் குறைவால் தில்லி - பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்
சென்னை: எரிபொருள் குறைவாக இருந்ததால் டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏா் இந்தியா விமானம், 172 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எரிபொருள் மிகவும் குறைவாக இருப்பதாக சமிக்ஞை வந்தது. இதையடுத்து, விமானத்தை பெங்களூரு சென்று தரையிறக்குவதில் பிரச்னை ஏற்படலாம் என்பதால், இதுகுறித்து விமானி, தலைமை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, தலைமை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், பெங்களூரு செல்லவேண்டிய அந்த விமானம், திங்கள்கிழமை பிற்பகல் 12.54-க்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது.
அதன் பின்னா் பிற்பகல் 2 மணிக்கு, சென்னையிலிருந்து ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று, பிற்பகல் 2.50-க்கு பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கியது. இதனால் சுமாா் 2 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.