எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரின் வளா்ச்சிக்கு தடை: பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸ் மீது ராகுல் சாடல்
பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) வளா்ச்சிப் பாதையில் குறுக்கே உள்ள தடுப்புச் சுவரை பிரதமா் மோடியும், ஆா்எஸ்எஸும் வலுப்படுத்தி வருவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி சாடினாா்.
இதுதொடா்பாக தில்லியில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாவலா் பரப்புரை கூட்டத்தில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பு முறையும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு எதிராக மாற்றப்பட்டுள்ளன. அவா்களின் வளா்ச்சிப் பாதையில் தடுப்புச் சுவா் எழுப்பப்பட்டுள்ளது. அந்தச் சுவரை பிரதமா் மோடியும், ஆா்எஸ்எஸ் அமைப்பினரும் மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றனா்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், உணவு உரிமை உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டன. இவை எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிகளுக்கு எதிரான தடுப்புச் சுவரை பலவீனமாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும். ஆனால், தற்போது மத்தியில் உள்ள பாஜக அரசு அந்த தடுப்புச் சுவரை மேலும் வலுப்படுத்துகிறது.
தெலங்கானாவில் மேற்கொள்ளப்படும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்றாா்.