Ilaiyaraja 50: ’நம்மை சேர்த்த இயல்புக்கு நன்றி’ - இளையராஜாவின் பொன்விழாவில் கமல்...
ஏ. ஆர். ரஹ்மான் வந்தாலும்... இளையராஜாவைப் புகழ்ந்த ரஜினி!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்கிய இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “இளையராஜா பார்க்காத வெற்றிகள் இல்லை. ஆனால், ஒருவருக்கு தொடர்ந்து வெற்றிகள் மட்டுமே கிடைக்கக் கூடாது. அவ்வபோது, தோல்விகளையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் வெற்றியின் அருமை தெரியும். அவர் கொடிகட்டி பறந்தபோது, இன்னொரு இசையமைப்பாளர் (ஏ. ஆர். ரஹ்மான்) வந்தார். அவர் வந்தபின் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நான் உள்பட பலர் அந்த புதிய இசையமைப்பாளரிடம் சென்றோம்.
ஆனால், என்ன நடந்தாலும் தி. நகரிலிருந்து பிரசாத் ஸ்டூடியோவுக்கு காலை 6 மணிக்கு இளையராஜாவின் கார் எப்போதும்போல் சென்றுகொண்டிருந்தது. பாஸ்கர் (இளையராஜாவின் சகோதரர்) மறைந்தார். ராஜாவின் மனைவி ஜீவா மறைந்தார்; உயிராக நினைத்த மகள் பவதாரணி மறைந்தார். ஆனால், எதுவும் ராஜாவை பாதிக்கவில்லை. எந்த சலனமும் இல்லாமல் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
82 வயதிலும் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்கிறார். இளையராஜாவின் உலகமே வேறு. அதனால்தான், அவரை இன்கிரிடேபிள் இளையராஜா (incredible ilaiyaraaja) என்கிறோம். இளையராஜாவுக்கு இருக்கும் திமிரை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு மிகவும் தகுதியான ஆள் அவர்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமுதே தமிழே எனதுயிரே... இளையராஜாவுடன் பாடிய கமல் ஹாசன்!