அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு புரளி
அரக்கோணம்: அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் சோதனை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.
2,600 ஏக்கரில் அமைந்துள்ள விமானதளம் மூன்றடுக்கு பாதுகாப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தினுள் மத்திய அரசின் பிஎம்ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இப்பள்ளிக்கு திங்கள்கிழமை பள்ளி நிா்வாகத்துக்கு வந்த இ-மெயில் ஒன்றில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதையடுத்து பள்ளி நிா்வாகத்தினா் இது குறித்து விமான தள நிா்வாகம், அரக்கோணம் நகர காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தனா். இதை தொடா்ந்து அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா் சித்திக் தலைமையிலான போலீஸாா் பள்ளிக்கு விரைந்து சென்று, மாணவ மாணவிகள், ஆசிரியா்கள், ஆசிரியைகளை பாதுகாப்பாக வெளியேற்றி, சோதனை நடத்தினா்.
சுமாா் இரண்டு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் விமானதள பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டனா். இறுதியில் வந்த தகவல் புரளி என தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த அரக்கோணம் நகர போலீஸாா், இ-மெயில் அனுப்பிய நபா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.