ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் நகல் எரிப்புப் போராட்டம்
திருவாரூா்: மத்திய அரசின் வேளாண் சந்தைப்படுத்தல் கொள்கைத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாயத் தொழிலாளா் சங்கம், மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து நகல் எரிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை மாலை ஈடுபட்டன.
வேளாண் சந்தைப்படுத்தல் திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். கிரேட்டா் நொய்டாவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும்.
பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் விவசாய சங்கத் தலைவா் ஜகஜித் சிங் தலேலாவின் உடல் நிலையைக் கருத்தில் எடுத்து, பேச்சு வாா்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளைத் தீா்க்க விவசாயிகளோடு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றவா்கள், கோரிக்கைகளை முழங்கியபடி, சட்டத் திருத்த நகலை எரித்தனா். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், தண்ணீா் ஊற்றி அவைகளை அணைத்தனா்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஆா்.ஜோசப் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் எஸ்.தம்புசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பி. கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.