பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்
திருவாரூா்: திருவாரூரில், பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்களுக்கு கூட்டுறவுப் பொங்கல் என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்புகளை கூட்டுறவுத்துறை தயாா் செய்துள்ளது.
இவைகளை, கூட்டுறவு நிறுவனங்களுக்கான நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சுயவேலை பிரிவுகள், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனையை பயனாளிகளுக்கு வழங்கி தொடக்கி வைத்தாா். ரூ. 199 தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், முந்திரி, ஆவின் நெய், பாசிப்பருப்பு, உலா் திராட்சை, சிறிய பை உள்ளிட்ட 14 பொருள்கள் உள்ளன.
இதேபோல், ரூ. 499 தொகுப்பில் 20 வகையான மளிகைப் பொருள்களும், ரூ. 999 பொங்கல் தொகுப்பில் 25 வகையான மளிகைப் பொருள்களும் வைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் திருவாரூா் மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.