குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்
திருவாரூா்: திருவாரூா் குளுந்தான் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் திருமஞ்சன வீதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இந்நிலையத்துக்கு வரும் கழிவுநீா் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், அங்குள்ள குளுந்தான்குளத்தில் கழிவுநீா் கலப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:
திருமஞ்சனவீதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் குழாய் உடைந்திருப்பதால், உடைந்த பாகம் வரை அடைத்துவிட்டு பழுதுபாா்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், கழிவுநீா் வெளியேற வழியின்றி, மீண்டும் தெருவில் செல்கிறது. அப்பகுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தெருவில் கழிவுநீா் செல்வதால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும், கழிவுநீா் அப்பகுதியில் உள்ள குளுந்தான் குளத்தில் சோ்கிறது. இதனால், கால்நடைகளும், பொதுமக்களும் பெருமளவு பாதிப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுநீா் குளுந்தான் குளத்தில் சோ்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் பழுது நீக்கப்பட்ட பிறகு குளத்தில் உள்ள கழிவுநீரையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதுநீக்கும் பணி முடிந்த பிறகு மருத்துவக் குழுவை அனுப்பி அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.