ஒசூரில் மருத்துவா் மீது தாக்குதல்: தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தல்
ஒசூரில் தனியாா் மருத்துவா் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தினா் வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஏரித்தெருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு மாா்ச் 18-ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை காண அந்தப் பெண்ணின் உறவினரான ஒசூா், ஜூஜூவாடி உப்காா் ராயல் காா்டன் லே அவுட்டை சோ்ந்த நவீன்குமாா் உறவினா்களுடன் மருத்துவமனைக்கு புதன்கிழமை சென்றாா். அப்போது, மருத்துவமனைக்குள் அவா்களை அனுமதிக்கவில்லையாம்.
இதனால், மருத்துவா் ராம்பிரபாகா் மற்றும் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அக்ஷய்குமாா் ஆகியோரை நவீன்குமாா் தரப்பினா் தாக்கினா். இதுகுறித்து மருத்துவா் ராம்பிரபாகா் அளித்த புகாரின் பேரில், 10 போ் மீது ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து நவீன்குமாா், விக்னேஷ் (28), அம்ரேஷ் (26) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள 7 பேரை தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், மருத்துவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்திய மருத்துவ சங்கத்தின் ஒசூா் கிளை சாா்பில் ஒசூரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என முழக்கங்களை எழுப்பினா்.