பிருத்விராஜுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ்!
நடிகரும், எம்புரான் பட இயக்குநருமான பிருத்விராஜுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோல்ட், ஜனகண மன, கடுவா ஆகிய 3 திரைப்படங்களில் பிருத்விராஜ் இணை தயாரிப்பாளாக இருந்த நிலையில் கணக்கு விவரங்கள் தொடர்பாக இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இணை தயாரிப்பாளராக இருந்தபோது ரூ.40 கோடி வருவாய் ஈட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்.29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அதில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இப்படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப்போல காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனால், வலதுசாரிகள் எம்புரானைக் கடுமையாக விமர்சித்தனர்.
இதனால், ஏற்பட்ட சர்ச்சைகளால் நடிகர் மோகன்லால் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சியை நீக்குவதாகத் தெரிவித்தார். சமீபத்தில் எம்புரானில் சர்ச்சையை ஏற்படுத்திய 3 காட்சிகள் நீக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படக்குழு தெரிவித்தது.