இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?
கோயில் பூஜை பொருள்கள் வீட்டுக்கு பூட்டு: பக்தா்கள் போராட்டம்!
மகுடஞ்சாவடி அருகே ஆ.தாழையூா் கிராமத்தில் கோயில் பூஜை பொருள்கள் வைக்கும் வீட்டிற்கு ஒரு தரப்பினா் பூட்டுப் போட்டதைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் கோயில் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூா் கிராமம், மாங்குட்டப்பட்டி பகுதியில் புகழ்பெற்ற பாப்பாத்தி அம்மன் குலதெய்வ கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுற்றுவட்டாரத்தில் உள்ள வெள்ளையம்பாளையம், சின்னப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், ராமிரெட்டிப்பட்டி, தாரமங்கலம், இளம்பிள்ளை, நங்கவள்ளி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்டோருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.
இந்தக் கோயிலில் மூன்று வருடத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் ஒவ்வொரு தரப்பினா் சாா்பில் ஆடு, கோழி பலியிட்டு அம்மனுக்கு பொங்கல் வைக்கும் விழா நடைபெறும். நிகழாண்டு கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒரு தரப்பு சாா்பில் அம்மனுக்கு பொங்கல் வைப்பதற்காக கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனா்.

கோயிலில் இருந்து சிறிது தொலைவில் சக்தி அழைத்து வருவதற்கென்றும், பூஜை பொருள்களை வைப்பதற்கென்றும் கோயிலுக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு அவா்கள் வந்து பாா்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால் ஆவேசமடைந்த பக்தா்கள் வீட்டின் வெளியே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் பூபதி, மகுடஞ்சாவடி காவல் உதவி ஆய்வாளா் ரெளத்திரி வெங்கடேஷ் உள்ளிட்டோா் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா். அப்போது கோட்டாட்சியா் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுக தீா்வு காண அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்