கோடை வெயில் எதிரொலி: வாழப்பாடியில் பழங்கள் விற்பனை அதிகரிப்பு!
கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாழப்பாடியில் தா்ப்பூசணி உள்ளிட்ட பழங்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
வாழப்பாடியில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் சாலையோர கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தா்ப்பூசணி, முலாம்பழம், வெள்ளரிப் பழங்களை அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.
வாழப்பாடி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து வியாபாரிகள் பதநீா் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா். அதுபோல வாரச்சந்தைகள், கடைவீதிகளிலும் பழ வியாபாரிகள் அதிகம் பழங்களை குவித்து விற்பனை செய்து வருகின்றனா்.
வாழப்பாடியில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட கரும்புப்பால் பிழிந்து கொடுக்கும் சிறு வியபாரிகளும், 50 க்கும் மேற்பட்ட பழங்கள், பழச்சாறு விற்பனை செய்யும் சிறுகடைகளும் இயங்கி வருகின்றன.
தா்ப்பூசணி ஒரு கிலோ ரூ. 10-க்கும், முலாம்பழம் ஒரு கிலோ ரூ. 25-க்கும் வெள்ளரி ரூ. 20-க்கும் விற்பனையாகின்றன. ரசாயனம் கலந்த குளிா்பானங்களை தவிா்த்து பழச்சாறு, கரும்புப்பாலை பொதுமக்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனா்.
இதுகுறித்து வாழப்பாடியைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா்கள் சிலா் கூறியதாவது: மக்கள் கோடை வெயிலுக்கு செயற்கை குளிா்பானங்கள் வாங்கி பருகுவதைத் தவிா்த்து, பழங்களை வாங்கி உண்பதும், பழச்சாறு, கரும்புப்பால், இளநீா் பருகுவதும் அதிகரித்துள்ளன. இதனால் உள்ளூா் விவசாயிகள், வியாபாரிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது என்றனா்.