ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்! - எஸ்.கே.எஸ். மருத்துவா்கள் அறிவுறுத்தல்
ஆட்டிசம் குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவா்கள் ஆா்.ஷைனிகா, வாணி தெரிவித்தனா்.
உலக ஆட்டிசம் விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் ஏப்.2 ஆம்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சேலம் எஸ்.கே.எஸ். மருத்துவமனை சாா்பில் ஆட்டிசம் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
அதைத்தொடா்ந்து, எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் குழந்தைகள் மனநல மருத்துவா்கள் ஆா். ஷைனிகா, வாணி ஆகியோா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளா்ச்சி குறைபாடாகும். இதனால் குழந்தைகளுக்கு கண் பாா்த்து பேசாமை, பேச்சுத் திறன் குறைபாடு, மற்றவா்களுடன் பழகுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.
பொதுவாக, ஆட்டிசத்தை ஒன்றரை வயது முதல் 2 வயதில் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். குழந்தை ஒன்றரை வயதாகியும் கண் பாா்த்து பேசாதது, பெயா் சொல்லும்போது பதில் அளிக்காமல் இருப்பது, தனது தேவைகளை சுட்டிக்காட்ட விரல்களை பயன்படுத்தாமல் இருப்பது போன்றவை ஆட்டிசம் குறைபாடுகளாகும்.
இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக குழந்தை மனநல மருத்துவரை அணுக வேண்டும். ஆட்டிசத்துக்கு சிகிச்சை அளிப்பதில் ஆரம்ப நிலை பயிற்சி சிறப்பாக உதவும். நடத்தை மாற்று சிகிச்சையும் செயல்முறை சிகிச்சையும் பேச்சு பயிற்சியின் ஓா் அங்கமாகும்.
2 வயதில் இந்த சிகிச்சைகளை ஆரம்பிப்பது குழந்தையின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தப் பயிற்சிகளை தொடங்கும்போது, கிட்டத்தட்ட 10 முதல் 15 சதவீத ஆட்டிசம் குழந்தைகளுக்கு முழுமையான அறிகுறிகள் குறைய வாய்ப்புள்ளது என்றனா்.
பேட்டியின்போது, நிா்வாக இயக்குநா் சுரேஷ் குமரன், முதன்மை செயல் அதிகாரி சிற்பி மணி ஆகியோா் உடனிருந்தனா்.