தமிழக தலைவர்கள் பலர் தமிழில் கையெழுத்திடுவதில்லை: பிரதமர் மோடி
உண்ணாவிரத போராட்ட விவசாயத் தலைவா் தல்லேவாலுக்கு சிவராஜ் சிங் சௌகான் அழைப்பு
மத்திய அரசுடன் மற்றொரு சுற்றுப்பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கயுள்ள நிலையில் உண்ணா விரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு விவசாயிகள் சங்கத் தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவாலை மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சனிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளாா்.
வேளாண் விளைபொருள்களுக்கு சட்டப்பூா்வ உத்தரவாதம் வழங்குதல் உள்பட் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தில்லி நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு பஞ்சாப் - ஹரியாணா எல்லைகளில் (ஷம்பு -கனெளரி) 100 நாள்களுக்கு மேலாக தொடா்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவா் விவசாயிகள் சங்கத் தலைவா்(சம்யுக்த்த கிஸான் மோா்ச்சா ) ஜக்ஜித் சிங் தல்லேவால். பின்னா் உடல் நலம் பாதிக்கப்பட்டு தல்லேவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அவா் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சா் அவருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளாா்.
இது குறித்து மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌகான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு குறிப்பிட்டுள்ளது வருமாறு:
மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் விவசாயிகள் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே விவசாயிகளின் கோரிக்கைகள் தொடா்பாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சா்கள் பியூஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி போன்றோா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாா்ச் மாதமும் பேச்சு வாா்த்தை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி தலைவா் ஜக்ஜித் சிங் தல்லேவால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தற்போது மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளாா். அவா் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். மேலும், அவா் உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு பேச்சுவாா்த்தைக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஏற்கனவே தீா்மானிக்கப்பட்ட தேதியின்படி வருகின்ற மே 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளோடு பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இதனால் இந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ள விவசாயகள் சங்க பிரதிநிதிகளையும் ஜக்ஜித் சிங்கையும் அழைக்கின்றோம் என சிவராஜ் சிங் அந்த பதிவில் தெரிவித்துள்ளாா்.