ஆப்கன் முதியவருக்கு 140 வயதா? தலிபான் அரசு விசாரணை!
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு 140 வயது எனக் கூறியதைத் தொடர்ந்து, தலிபான் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஆகெல் நஸிர் என்ற முதியவர் தனக்கு 140 வயதுக்கு மேல் ஆவதாகக் கூறியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவரிடம் எந்தவொரு ஆவணமும் இல்லாத நிலையில் இதை உறுதி செய்ய அந்நாட்டை ஆளும் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த முதியவர் கூறுகையில், அவர் 1880-ளில் பிறந்ததாகவும், தான் 30-ம் வயது இளைஞராக இருந்தபோது கடந்த 1919 ஆம் ஆண்டு மூன்றாம் ஆப்கான் - ஆங்கில போரின் வெற்றியை கொண்டாடியதாகக் கூறியுள்ளார்.
மேலும், அந்த வெற்றியை அப்போதைய ஆப்கானிஸ்தான் அரசர் அமானுல்லா கானின் மாளிகையில் கொண்டாடப்பட்டபோது தானும் அங்கு இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கொண்டாட்டத்தின்போது ஆங்கிலேயர்களை வெளியேற்றியதற்காக அரசருக்கு அனைவரும் நன்றி தெரிவித்ததாகவும், அவருடன் அதில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் இப்போது உயிருடன் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது பல தலைமுறை சந்ததியுடன் வாழ்ந்து வரும் அந்த முதியவரின் கூற்றுக்கள் அனைத்தையும் அவரது குடும்பத்தினர் உறுதியாக நம்புகின்றனர். இந்தத் தகவலானது தலிபான் அரசுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு அந்த முதியவரின் வயதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைப் பற்றி அந்த மாகாணத்தின் செய்தித் தொடர்பாளார் முஸ்தக்ஃபார் குர்பாஸ் கூறுகையில், முதியவரின் வயதை உறுதி செய்ய சிறப்பு பதிவுக் குழுவொன்று பணியமர்த்தியுள்ளதாகவும், ஒருவேளை அவர் கூறுவது உண்மையென்று உறுதியானால் அதை சர்வதேச அளவில் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 1875 ஆம் ஆண்டு பிறந்து தனது 122-ம் வயதில் 1997 ஆம் ஆண்டு மரணமடைந்த ஜீன் கால்மண்ட் என்ற மூதாட்டிதான் தற்போது வரையில் உலகில் அதிக வயது வாழ்ந்தவர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆவார்.
தலிபான் அரசின் விசாரணைகளின் மூலம் முதியவர் அகெல் நஸிர் கூறுவது உறுதியானால் ஜீன் கால்மண்ட்டின் சாதனை முறியடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது! திருக்குறள் மூலம் நன்றி சொன்ன மோடி!!