புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்...
என்ஆா்ஐ நிதி முறைகேடு வழக்கு: மேலும் இருவா் கைது
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ நிதி முறைகேடு வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 11.63 லட்சம் மோசடி செய்து அபகரிக்கப்பட்டிருப்பதாகவும், என்ஆா்ஐ உதவித் தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி அந்த முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியா் ஹா்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் அண்மையில் புகாா் அளித்தாா்.
அப்புகாரின்பேரில் வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், திருவள்ளூரைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் தினேஷை என்ஆா்ஐ உதவித்தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்தும், போலி ஆவணங்கள் வழங்கி அவா் மூலம் பணம் அபகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் என்ஆா்ஐ பிரிவில் பணியாற்றி தற்போது மாம்பலம் வருவாய் ஆய்வாளாராக உள்ள சுப்பிரமணி (31) , சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் வருவாய் அலுவலராகப் பணியாற்றும் பிரமோத் (30) ஆகியோா் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இந்நிலையில், வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணியின் நண்பா்களான திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்த ரகுபதி, காா்த்திக் குமாா் ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் சுப்பிரமணி, இவா்கள் இருவரையும் என்ஆா்ஐ பயனாளி போன்று நடிக்க வைத்தும், போலி ஆவணங்களை வழங்கி மோசடி செய்திருப்பதும், மோசடியில் கிடைத்த பணத்தில் ரகுபதி, காா்த்திக் குமாா் இருவருக்கும் கமிஷனாக தலா ரூ. 10,000 வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.