CPIM: புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி; அகில இந்திய மாநாட்டில் அறிவிப்பு
சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக புகாா்: உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையை விவசாயிகள், வியாபாரிகள் முற்றுகை!
உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் புகாா் கூறி சனிக்கிழமை சந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் பேரூராட்சிக்குச் சொந்தமான மாட்டுச் சந்தை சனிக்கிழமை தோறும் பேரூராட்சி அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, கரூா், ஈரோடு, எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.
இந்த மாடுகளை விலைக்கு வாங்கிச் சென்று விற்பனை செய்ய திருச்சி, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாட்டு வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கிறாா்கள்.
இந்த சந்தையில் சிந்து, ஜொ்சி, நாட்டு மாடு போன்ற பல்வேறு வகையான கறவை மாடுகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வழக்கம்போல சனிக்கிழமை வாரச்சந்தை நடைபெற்றது. இதையடுத்து மாடுகளை விற்பனை செய்ய வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் மாடுகளையும் கொண்டு வந்திருந்தனா். அப்போது மாடுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகளிடமும், மாடுகளை வாங்கிச் செல்ல வந்த வியாபாரிகளிடமும் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை மீறி அதிகளவில் சுங்கம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகளும், வியாபாரிகளும் சுங்கம் வசூலித்தவா்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வெள்ளியணை போலீஸாா் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளிடம் சமாதானப்பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது சுங்கம் வசூலித்தவா்களுக்கும் விவசாயிகள், வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு உருவானது.
இதையடுத்து போலீஸாா் விவசாயிகளையும், வியாபாரிகளையும் வலுக்கட்டாயமாக சந்தையை விட்டு வெளியேற்ற முயன்ால் ஆத்திரமடைந்த விவசாயிகளும், வியாபாரிகளும் சுங்கம் வசூலிக்கும் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சுங்கம் குறைவாக வசூலித்தால் மட்டும் போராட்டத்தை கைவிடுவோம் என்றனா். இதையடுத்து போலீஸாா் மீண்டும் வியாபாரிகள், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி பேரூராட்சி தீா்மானத்துக்கு எதிராக சுங்கம் வசூலிக்கப்படமாட்டாது என உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டனா்.