வஃக்ப் வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கமல்ல: ஜெ.பி. ...
மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!
கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோயம்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக செந்தில்வடிவு என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவா், மாணவிகள் கழிவறைக்கு செல்லும்போது காலணி அணிந்து செல்லக்கூடாது, மீறிச் சென்றால் கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்து தர வேண்டும் எனக் கூறியதாக தெரிகிறது.
மேலும் மாணவிகள் கழிவறைக்கு செல்லும்போது தலைமையாசிரியை அறையில் உள்ள ஒரு நோட்டில் செல்லும் நேரம், வெளியே வரும் நேரம், காரணம் ஆகியவற்றை எழுதி கையொப்பமிட வேண்டும் என்று தலைமை ஆசிரியை வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதேபோல பள்ளி வளாகத்தை தூய்மைப் படுத்தும் பணியில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மாணவிகள், கரூா் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் வெள்ளிக்கிழமை புகாா் மனு ஒன்றை அனுப்பினா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வராணியிடம் புகாா் குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டாா். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியை செந்தில்வடிவிடம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
மேலும் இந்த புகாரில் கூறப்பட்ட நிகழ்வுகள் குறித்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. கடந்த இரு வாரங்களுக்கு முன் சின்னம்மநாயக்கன்பட்டியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த புகாரையடுத்து பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.