தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்த செயல் விளக்கம்!
கரூரில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள்குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.
கரூா் மாவட்டத்தில் கரூா் வட்டாரத்தில் மட்டும் சுமாா் 3,400 ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெற்றுவருகிறது. தற்போது, தென்னையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் அதிகளவில் தாக்கி வருகிறது. குறிப்பாக புஞ்சைகடம்பன்குறிச்சி, நெரூா் பகுதிகளில் இதன் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில், நோய் தாக்குதல் குறித்து விவசாயிகள் வேளாண் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சனிக்கிழமை தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் தியாகராஜன் தலைமையில், புழுதேரி வேளாண்மை அறிவியல் மையத் தலைவா் திரவியம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் தமிழ்செல்வி ஆகியோா் கொண்ட குழுவினா் நெரூா், புஞ்சைகடம்பங்குறிச்சியில் ஈக்களால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னா் விவசாயிகளுக்கு மஞ்சள் நிற நெகிழித் தாள்களால் உருவாக்கப்பட்ட 5 அடி நீளம், 1.5 அடி அகலம் கொண்ட இரு புறமும் விளக்கெண்ணெய் தடவப்பட்ட மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு எட்டு வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டும் அல்லது தென்னை மரங்களின் தண்டு பகுதியில் சுற்றியும் ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் கவா்ந்து அவற்றை அழிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்கங்களை செய்து காண்பித்தனா். நிகழ்ச்சியில் விவசாயிகள், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.