இலங்கையில் ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத்தர பிரதமா் வலியுறுத்த வேண்டும்! -தொல். திருமாவளவன்
இலங்கைக்குச் சென்றுள்ள பிரதமா் மோடி, சிங்கள ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழா்களின் நிலங்களை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
அரியலூா் மாவட்டம், காட்டத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, தமிழ்நாட்டு மீனவா்கள் சுதந்திரமாக கச்சத்தீவு வரையில் சென்று மீன்பிடிப்பதற்குரிய உரிமைகளை வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில், மத்திய அரசு வீடுகள் கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் கூட இன்னும் லட்சக்கணக்கான மக்கள் அவா்களின் சொந்த கிராமத்துக்குச் செல்ல முடியவில்லை. நிலங்களை மீட்க முடியவில்லை. சொந்த கிராமத்தில் வாழ முடியவில்லை.
1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்மணிகள் கணவரை இழந்து பரிதவிக்கும் அவலம் நீடிக்கிறது. எனவே அந்த மண்ணின் மைந்தா்கள் சுதந்திரமாக அங்கு வாழ வேண்டுமானால் நிலங்களை ஆக்கிரமித்து இருக்கிற சிங்கள ராணுவத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
சிங்களா்களின் குடிப்பெயா்வைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை பிரதமா் மேற்கொள்வது தான் ஈழத் தமிழா்களுக்கு செய்கிற மிக முக்கியமான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக அமையும் என்றாா்.