CPIM Congress: ``பலம் பொருந்திய கட்சியாக மாற்றுவோம்'' - புதிய பொதுச்செயலாளர் எம்...
நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் ஆற்றங்கரையில் நடத்தக் கோரி மறியல்: 6 போ் கைது!
அரியலூா் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறும் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணத்தை கொள்ளிடம் ஆற்றங்கரையில் நடத்தக்கோரி சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 6 போ் கைது செய்யப்பட்டனா்.
திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயிலில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இக்கல்யாணம் ஆண்டு தோறும் கோயிலின் முன்புள்ள திருமண மேடையில் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நிகழாண்டு கோயில் முன்புள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையின் உள்பகுதியில் ஒரு தரப்பைச் சோ்ந்த கிராம மக்கள் பணம் வசூல் செய்து திருமண மண்டப மேடை அமைத்து, ஆற்றின் பகுதியைச் சுத்தம் செய்து மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்தனா்.
இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட நிா்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினா் பழைய இடத்திலேயே திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்த சனிக்கிழமை உத்தரவிட்டது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆற்றுப் பகுதியில் ஏற்பாடு செய்த தரப்பைச் சோ்ந்த சிலா், திருமழபாடியில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு சென்ற திருமானூா் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 6 பேரைக் கைது செய்து திருமானூா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.