மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்
மலையாள சினிமா குறித்து இயக்குநர் கலித் ரஹ்மான் பேசியுள்ளார்.
அனுராக கரிக்கின் வெள்ளம் (Anuraga Karikkin Vellam) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கலித் ரஹ்மான். தொடர்ந்து, உண்டா (unda), லவ் (love), தள்ளுமலா (thallumala) என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து மலையாளத் திரைத்துறையின் முக்கியமான இளம் இயக்குநராக உள்ளார்.
தற்போது, இவர் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ஆழப்புழா ஜிம்கானா. நஸ்லன் நாயகனாக நடித்த இப்படம் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கலித் ரஹ்மானிடம், “இந்தியளவில் மலையாளத்தில்தான் சிறந்த படங்கள் உருவாகின்றன என்பது போன்ற கருத்துகளைப் பார்க்கிறோம். மலையாள சினிமாவிற்குள் இருக்கும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?” எனக் கேட்கப்பட்டது.
அதற்கு, கலித் ரஹ்மான், “மலையாளத் திரைத்துறையில் வித்தியாசமான படங்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. மலையாள சினிமாவில் திறமையானவர்களும் அதிகம் என்பதால் சிறப்பாக மேலும் சிறப்பாக என முன்னேற வேண்டியுள்ளது. மலையாள ரசிகர்கள் இலக்கியம் படிப்பதுடன் அதிகமாக உலக சினிமாக்களை பார்க்கின்றனர். என் அம்மா பள்ளி, கல்லூரிக்குச் செல்லாதவர். ஆனால், இயக்குநர் கிம் கி டுக் படங்கள், ஈரான் படங்கள் என ரசனையாகத் திரைப்படங்களைப் பார்க்கிறார். இலக்கியங்கள் பற்றியும் அவரிடம் பேச முடியும். இதனால்தான், மலையாளத் திரைப்படங்கள் அழுத்தமாக உருவாகின்றன என நினைக்கிறேன்.” என்றார்.
இதையும் படிக்க: பிரசாந்த் - இயக்குநர் ஹரி கூட்டணியில் புதிய படம் அறிவிப்பு!