வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?
வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்றும் சரிவைச் சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,449.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்தது.
நண்பகல் 12.10 மணிக்கு சென்செக்ஸ் 3,014.98 புள்ளிகள் சரிந்து 72,349.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 971.60 புள்ளிகள் குறைந்து 21,932.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அனைத்து பங்குகளும் இன்று சரிவைச் சந்தித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி 20.16 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள் என்ன?
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 10 முதல் 50% வரை வரிவிதிப்பு செய்தது, உலக அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை ஏற்படும் பதட்டமும் உள்ளது.
இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி உலக அளவில் பல நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
ஜப்பான்(7%), தென் கொரியா(5%), சீனா(7%) என ஆசியா மற்றும் ஐரோப்பாவில் பெரும்பாலும் அனைத்து பங்குச்சந்தைகளும் சரிவில் உள்ளன.
அமெரிக்க வரிவிதிப்பால் பங்குச்சந்தையின் இன்றைய வீழ்ச்சி தொடக்கம்தான் என்றும் இது எப்படி மாறும் எனத் தெரியவில்லை என்றும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால் அமெரிக்க கருவூலம் போன்ற பாதுகாப்பான வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் இறங்கியுள்ளனர்.
உலக அளவில் பொருள்களில் விலை குறைந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை, தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ளதால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! மருத்துவர்கள் எச்சரிக்கை!!