கேரளம்: கோயிலில் ஒலித்த ஆா்எஸ்எஸ் பாடல்: தேவஸ்வம் வாரியம் எச்சரிக்கை
மத்திய பிரதேசம்: போலி இதய மருத்துவர்; பறிபோன 7 உயிர்கள்; தப்பித்த சில நோயாளிகள். நடந்தது என்ன?
மத்திய பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரி மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஜான் கெம் என்ற இதயநோய் நிபுணர் பணி செய்து வந்துள்ளார். இவர் செய்த இதய அறுவை சிகிச்சையால் ஒரே மாதத்தில் 7 பேர் இறந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மிக பிரபலமான இதய நோய் நிபுணர் ஜான் கெம். இவர் தற்போது பிரிட்டனில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நரேந்திர விக்ரமாதித்யா யாதவ் என்ற நபர் தன்னுடைய அடையாளங்கள் அனைத்தையும் மறைத்து, 'தான் தான் பிரிட்டனின் பிரபலமான இதய நோய் நிபுணர் ஜான் கெம்' என ஆள் மாறாட்டம் செய்ததோடு, அதற்கேற்ப போலி ஆவணங்களையும் கொடுத்து மருத்துவராக பணியில் சேர்ந்திருக்கிறார்.
ஒரே மாதத்தில் 7 பேர் அறுவை சிகிச்சை செய்ததையடுத்து இறந்ததையொட்டி, டாமோ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு தலைவர் தீபக் திவாரி புகார் அளித்ததன் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவமனையின் அனைத்து பதிவுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து தீபக் திவாரி பேசுகையில், "இதுவரையில் அதிகாரபூர்வமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக இருந்தாலும், உண்மையில் இதைவிட அதிகமான நபர்கள் இறந்திருக்கலாம் என தெரிகிறது. இந்த போலி மருத்துவரிடம் சிகிச்சை செய்துகொள்ளாமல் மருத்துவமனையைவிட்டு வெளியேறிய சிலர், 'தங்களது உறவினர்கள் உடல் நலக்குறைவினால் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, இந்த போலி மருத்துவரின் நடவடிக்கைகள் எங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியதால், எங்கள் உறவினரை வேறொரு மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறினார்கள்' என்றிருக்கிறார்.

இந்த போலி மருத்துவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ, தனது குழுவுடன் இன்று (ஏப்ரல் 7) டாமோவுக்குச் செல்வார் என தெரிகிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
