நெருக்கடியில் தக்காளி விவசாயிகள்: பாஜகவை விமர்சித்த அகிலேஷ்!
Dhoni : `அடையாளத்தை இழக்காதீர்கள்' - எங்கள் ஹீரோவாகவே ஓய்வை அறிவியுங்கள் தோனி
'சென்னை தோல்வி!'
சேப்பாக்கத்தில் நடந்த டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோற்றிருக்கிறது. தோல்வி என்பதைத் தாண்டி மோசமான தோல்வி, மோசமான அணுகுமுறை. தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இயன்றவரை போராடும் குணம்தான் விளையாட்டின் அடிப்படை. அந்த குணமே இந்த சென்னை அணியிடம் இல்லை. அணியின் மீதான ரசிகர்களின் ஈர்ப்பையும் எதிர்பார்ப்பையுமே கூட இந்தத் தோல்வி சுக்குநூறாக. உடைத்துப் போட்டிருக்கிறது.

'சேப்பாக்க ரசிகர்கள் அதிருப்தி!'
சேப்பாக்கத்தின் ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். போட்டி முடிந்த பிறகும் கூட கேலரிகளை விட்டு கலையமாட்டார்கள். போட்டிக்குப் பிறகு இரு அணிகளின் கேப்டன்களும் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டுவிட்டுத்தான் ஒரு கூட்டம் மைதானத்தை விட்டே நகரும். அப்படிப்பட்ட கூட்டம் நேற்று சென்னை சேஸிங் செய்துகொண்டிருந்த சமயத்தில் 18, 19 வது ஓவர்களிலேயே கேலரிகளிலிருந்து கலைய தொடங்கினர். இத்தனைக்கும் தோனி க்ரீஸில் இருந்தார். தோனியை பார்க்கத்தான் அத்தனை ரசிகர்களும் அப்படியிருந்தும் போட்டி முடிவதற்குள்ளேயே கலைந்து சென்றனர். சேப்பாக்கத்தின் ரசிகர்களை இத்தனை அதிருப்தியாக பார்த்ததே இல்லை.
'தோனியின் மீதான நம்பிக்கை!'
சச்சின் அவுட் ஆகிவிட்டால் டிவியை அணைத்துவிட்ட ஒரு தலைமுறையைப் போல, இங்கே தோனி களத்தில் இருக்கும் வரை நம்பிக்கையோடு போட்டியைப் பார்க்கலாம் என்று கூறும் ஒரு தலைமுறையும் இருக்கிறது. இந்த வர்ணனைதான் தோனியின் அடையாளம். இக்கட்டான களத்தில் க்ரீஸூக்குள் வந்து போட்டியின் சூழலை உணர்ந்து சமயோஜிதமாக ஆடி கடைசியில் அழுத்தம் மொத்தத்தையும் பௌலர்கள் மீது ஏற்றிவிட்டு, பெரிய பெரிய ஷாட்களை ஆடி தோனி தனது அணியை வெல்ல வைப்பார்.

பல சமயங்களில் அசாத்தியமான இலக்குகளை தோனி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முடித்துக் கொடுத்திருக்கிறார். இதே சென்னை அணிக்கு 2010 இல் ப்ளே ஆப்ஸூக்கு செல்ல பஞ்சாபுக்கு எதிரான கடைசி லீக் போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டிய சூழல் இருந்திருக்கும். பஞ்சாப் அணி நன்றாக ஆடி 190+ டார்கெட்டை நிர்ணயிக்கும். சென்னை சேஸ் செய்யவேண்டும். ரெய்னா, பத்ரிநாத் போன்ற வீரர்களெல்லாம் கூட நன்றாக ஆடியிருப்பார்கள். ஆனாலும் இலக்கை எட்ட அசகாய ஆட்டம் தேவைப்பட்டது. அதை ஆடிக்கொடுத்தது தோனிதான்.
கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்படும். இர்பான் பதான் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பவுண்டரியோடு 108 மீட்டருக்கு மேல் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்ட்டு போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்திருப்பார் தோனி. 'திடீரென ஒரு சத்தம் கேட்டது. வெள்ளையாக ஒரு பொருள் தரம்சாலாவின் வானத்தில் பறந்து இமாலயத்தில் எங்கேயோ போய் விழுந்தது.. ' என தோனியின் இந்த ஃபினிஷை ஹர்ஷா போக்ளே பின் நாட்களில் வர்ணித்திருப்பார்.
'தோனியின் மாஸ்டர் க்ளாஸ்!'
சென்னை அணி அரையிறுதிக்கு முன்னேறி இறுதியில் கோப்பையையும் வென்றிருக்கும். அதேமாதிரி, சென்னை அணி கம்பேக் கொடுத்த சீசனில் சின்னச்சாமி மைதானத்தில் பெங்களூருவுக்கு எதிராக ஒரு போட்டி. பெங்களூரு அணி முதலில் பேட் செய்து 200+ டார்கெட்டை செட் செய்துவிடும். சேஸிங்கில் தோனி நம்பர் 6 இல் வருவார். அவர் உள்ளே வரும்போதே ஓவருக்கு 12 ரன்களுக்கு நெருக்கமாக தேவைப்படும்.
முதல் 10 பந்துகளில் நேரமெடுத்து ஆடிவிட்டு அடுத்து வைத்து வெளுத்தெடுப்பார். இறுதியாக 34 பந்துகளில் 70 ரன்களை எடுத்திருப்பார். சென்னை அணி 2 பந்துகளை மீதம் வைத்து வென்றிருக்கும் கோரி ஆண்டர்சன் வீசிய கடைசி ஓவரில் கொஞ்சம் ஒயிடாக வந்த பந்துக்கு ஒரு ஸ்டெப் மட்டும் ஆப் சைடில் எடுத்து வைத்து மிட் விக்கெட் மேல் பொளேரென ஒரு சிக்சரை வின்னிங் ஷாட்டாக அடித்திருப்பார். இன்னமும் அந்த ஷாட் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. டி20 போட்டிகளில் ஒரு சேஸிங்கை எப்படி முன்னெடுத்து செல்லவேண்டும் என்பதற்கான மாஸ்டர் க்ளாஸை போல அந்த இன்னிங்ஸ் இருக்கும்.

சென்னை அணிக்காக மட்டுமா? இடையில் இரண்டு ஆண்டுகள் புனே அணிக்காக ஆடியிருப்பாரே. அப்போது பஞ்சாப் அணிக்கு எதிரான ஒரு போட்டி கடைசி வரை சென்றிருக்கும். கடைசி ஓவரில் மிட்ட 24 ரன்களை அடிக்க வேண்டும். அக்சர் படேல் வீசினார். கடைசி 2 பந்துகளில் 12 ரன்கள் வேண்டுமென போட்டி வந்து நிற்கும். எந்த சலனமும் தோனியின் முகத்தில் இருக்காது. அத்தனை அமைதியாக துறவியைப் போல நின்று அசால்ட்டாக இரண்டு சிக்சர்களை அடித்துவிட்டு எந்த அலப்பறையும் இல்லாமல் பெவிலியனுக்கு செல்வார்.
இதேமாதிரி எத்தனையோ ஆட்டங்களை முடித்துக் கொடுத்திருக்கிறார். வெற்றிகரமாக முடிக்க இயலவில்லையெனினும் கடைசி வரைக்கும் விடாமல் போராடுவார். கடைசி நொடி வரைக்கும் எதிரணியை பதற்றத்திலேயே வைத்திருப்பார். சேஸிங்கில் மட்டுமா? முதலில் பேட்டிங் செய்யும்போதும் அசாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறாரே. சாம்பியன்ஸ் டிராபி என்று நினைக்கிறேன். சன்ரைசர்ஸூக்கு எதிரான போட்டி ஒன்றில் திசாரா பெராராவின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை அடிப்பார். அப்படி ஒரு தோனியை அதற்கு முன் பார்த்தது இல்லை.
பெங்களூருவுக்கு எதிரான போட்டி ஒன்று. சென்னை அணி 27-5 என்ற நிலையில் இருக்குமென நினைக்கிறேன். அந்த சமயத்தில் நின்று டெய்ல் எண்டர்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சென்னை அணியை 130 க்கு நெருக்கமான ஸ்கோருக்கு எடுத்துச் செல்வார். அந்தப் போட்டியில் சென்னை தோற்கத்தான் செய்யும். அந்த இன்னிங்ஸெல்லாம் அத்தனை ஊக்கமாக இருக்கும். அணிக்காக ஒற்றை ஆளாக நின்று போராடியிருப்பார்.
'ஹீரோவாகவே ஓய்வை அறிவியுஙகள் தோனி!'
இதெல்லாம்தான் தோனியின் அடையாளம். நம்பிக்கையே இல்லாத இடத்திலிருந்து போராடி அணியை வெல்ல வைப்பார். அது பல கோடி பேருக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். ஏனெனில், பல சாமானியர்கள் அவரை தங்களோடு தொடர்புப்படுத்தி பார்த்துக் கொள்கிறார்கள். எளிய பின்னணியிலிருந்து கிளம்பி வந்து சாதித்த தங்களில் ஒருவராக தங்களின் நம்பிக்கையாக பார்க்கிறார்கள்.

அதனால்தான் இந்தியாவில் வேறெந்த வீரருக்கும் இல்லாத வரவேற்பும் ஆதரவும் தோனிக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட தோனி தோல்வியை ஒப்புக்கொண்டதைப் போல எந்தப் போராட்டமும் இல்லாமல் மனம்போன போக்கில் ஆடுவதை ஒரு பெரும் கூட்டத்தையே இந்த கிரிக்கெட்டின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இப்படியே ஆடி தோனி தன்னுடைய அந்த அடையாளத்தை இழந்துவிடக்கூடாது. சாமானியர்களிலிருந்து புறப்பட்டு ஹீரோவானவர், அப்படியே ஹீரோவாகவே ஒதுங்கிக் கொள்ள வேண்டும். வரலாற்றில் அவர் என்றைக்கும் நம்பிக்கையளிக்கும் ஹீரோவாகவே நிற்க வேண்டும்..