புதுச்சேரி: `சிபிஎஸ்இ பாடத்திட்ட தேர்வில் 50 சதவிகித மாணவர்கள் தோல்வி’ - அதிர்ச்...
தாது மணல் முறைகேடு வழக்கு: 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
தாது மணல் முறைகேடு வழக்கு தொடா்பாக, தமிழகம் முழுவதும் தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், தொடா்புடையவா்களின் வீடுகள் என சுமாா் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் மணலிலிருந்து இல்மனைட், ரூட்டைல்ஸ், சிா்கோன், மோனோசைட் உள்ளிட்ட கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுப்பதாக 2013-ஆம் ஆண்டு புகாா் எழுந்தது. அந்த 3 மாவட்டங்களிலும் கடற்கரையோரங்களில் தாது மணல் எடுக்க தமிழக அரசு தடை விதித்தது.
ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபா் குழு, சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடற்கரை மணலை எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது.
இந்நிலையில், சட்டவிரோதமாக கடற்கரை தாது மணலை எடுத்ததால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.
தமிழக அரசு அமைத்த மற்றொரு ஒரு நபா் குழுவின் விசாரணையில், தனியாா் கனிம நிறுவனங்கள் 1.5 கோடி டன் தாது மணலை கிடங்குகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதோடு, ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 16 லட்சம் டன் கனிமங்கள் சில அரசு அதிகாரிகள் உதவியுடன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்தது தமிழக அரசு விசாரணையில் கண்டறியப்பட்டது.
ரூ.5,832 கோடி இழப்பு: இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றம் நியமித்த வழக்குரைஞா் ஆணையா் வி.சுரேஷின் விசாரணை அறிக்கை, சுமாா் 1.50 கோடி டன் கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்ததால் அரசுக்கு ரூ.5,832 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இந்தத் தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட தனியாா் கனிம நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி தனியாா் கனிம நிறுவனங்கள், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ரூ.5,832 கோடியை சம்பந்தப்பட்ட தனியாா் கனிம நிறுவனங்களிடமிருந்து அரசு வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரவிட்டது.
சிபிஐ சோதனை: இதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரை தாது மணல் ஆலைகளை நடத்தும் விவி மினரல்ஸ் உள்ளிட்ட தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
சென்னை எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள ஒரு தனியாா் கனிம நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம், எழும்பூா் சாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அந்த நிறுவனத்தின் அதிகாரி வீடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், தொடா்புடையவா்களின் வீடுகள் உள்பட மாநிலம் முழுவதும் சுமாா் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க முடியும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.