ரூ.30 லட்சத்தில் குடிநீா் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல்
சந்தவேலூா் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது (படம்).
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சியில், ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் 60,000 லிட்டா் கொள்ளவு உள்ள குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி அமைக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சந்தவேலூா் ஊராட்சி மன்றத் தலைவா் வேண்டாமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்பந்தாரா் ஜெயசந்திரன் அடிக்கல் நாட்டி குடிநீா் தொட்டி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிா்வாகிகள், சிறகுகுள் அறக்கட்டளை நிா்வாகிகள், சந்தவேலூா் ஊராட்சிமன்ற துணைத்தலைவா் உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.