துணை பதிவாளரை மாற்றக் கோரி ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மைய மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி இளைஞா் மேம்பாட்டு மைய துணைப் பதிவாளரை மாற்ற வலியுறுத்தி மையத்தின் மாணவா்கள் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா்கள் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு கேரளம், ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இந்த மையத்தில் கல்வி பயின்று வருகின்றனா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் துணைப் பதிவாளராக பணியாற்றி வரும் அவினாவ் தாகூா் சண்டிகரில் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தின் கிளை நிறுவனத்தில் பணியாற்றியபோது, பாலியல் புகாரில் சிக்கி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கில் முன்ஜாமின் பெற்ாகத் தெரிகிறது.
வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அவினாவ் தாகூா் ஸ்ரீபெரும்புதூா் கிளைக்கு மாற்றப்பட்டு துணை பதிவாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மையத்தின் மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை முதல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இது குறித்து மாணவா்கள் கூறுகையில், பாலியல் புகாரில் சிக்கிய ஒருவா் தேசிய கல்வி நிறுவனத்தில் துணைப் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதனால் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் கல்வி கற்கும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே அவரை பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தெரிவித்தனா். இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவா்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை பேச்சு நடத்தினா்.